×

குன்னூர் எக்கோ ராக் பகுதியில் 1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி

*நண்பர்களிடம் போலீசார் விசாரணை

ஊட்டி : நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹாதி. இவரது மகன் அப்துல் ஆசிக் (13). குன்னூரில் உள்ள அறிஞர் அண்ணா பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் அப்துல் ஆசிக் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் குன்னூர் அருகே உள்ள எக்கோ ராக் என்ற மலைப்பகுதிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்துள்ளனர். அப்போது அப்துல் ஆசிக் எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து தவறி 1000 அடி பள்ளத்தில் விழுந்ததாக தெரிகிறது.

இதனை கண்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்துல் ஆசிக்கை தேடி பார்த்து கிடைக்காததால் வீட்டிற்கு வந்துவிட்டனர். அப்துல் ஆசிக் மலையில் இருந்து தவறி விழுந்ததை அவரது பெற்றோரிடமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மகன் இரவு வரை வீட்டிற்கு வராததால் அப்துல் ஆசிக்கின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களிலும் தேடிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்திலும் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மேல்குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அப்துல் ஆசிக் கடைசியாக தனது நண்பர்களுடன் வெளியில் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுவனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் எக்கோ ராக் பகுதிக்கு சென்றதையும், அங்கு அப்துல் ஆசிக் மலையில் இருந்து தவறி விழுந்ததையும் கூறியுள்ளனர். தொடர்ந்து எக்கோ ராக் பகுதிக்கு குன்னூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் சென்று சிறுவன் அப்துல் ஆசிக் தவறி விழுந்த இடத்தில் தேடினர்.

அப்போது 1000 அடி பள்ளத்தில் சிறுவன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பி எடுக்கும்போது சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post குன்னூர் எக்கோ ராக் பகுதியில் 1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Echo Rock ,Coonoor ,Abdul Hadi ,Coonoor Wannarpet ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு